கரூர் மாவட்டம், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.
ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.
விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.