தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு வாழ்த்துகளை ஸ்டாலினிடம் பரிமாறிக்கொண்டார் ப.சிதம்பரம். வாழ்த்துகள் சொல்வதற்காக மட்டுமே இந்த சந்திப்பு நடக்கவில்லை; அதற்கும் மேலானது என்கிறார்கள் திமுகவினர்.
இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "மகாராஸ்ட்ரா மாநிலத்தில் இருந்த கடந்த 2016-ல் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் ப.சிதம்பரம். அவரது பதவிகாலம் இந்த வருடம் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல, தமிழகத்தில் ஜூன் மாதம் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் 4 இடங்களை மிக எளிதாக திமுக ஜெயித்து விடும். அதில் ஒரு இடத்தை ப.சிதம்பரம் எதிர்பார்க்கிறார். அதற்காக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. ப.சி.யின் கோரிக்கையை திமுக நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்கள்.