Skip to main content

தி.மு.க கூட்டணி; திருச்சி தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Trichy Constituency Candidate Announcement for DMK alliance

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி அறிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (18-03-24) கையெழுத்தாகி ஒப்பந்தமானது. அதன்படி, மதிமுகவுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிட்டது. 

இந்த நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இது குறித்து, வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். மதிமுகவுக்கு தேர்தல் சின்னம் இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், பட்டியலில் இருக்கக்கூடிய 3 சின்னத்தை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை. மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம்.” என்று கூறினார்,  

சார்ந்த செய்திகள்