
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை 11:25 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்கிறார். 8 நாள் அரசு முறை பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் செல்கின்றனர்.
25 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் சில நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்துள்ளார். 26 ஆம் தேதி சிங்கப்பூர் பயணம் முடிந்து முதலமைச்சர் ஜப்பான் செல்கிறார். அங்கும் முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். இந்த வெளிநாட்டுப் பயணத்தில் குறைந்தபட்சம் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தொழில்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு 31 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணம் பெரிய அளவில் உதவும் என்கிறார்கள் தொழில்துறையினர். இதற்கிடையே, முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் அவர் யார் யாரையெல்லாம் சந்திக்கிறார்? அந்த தொழில் நிறுவனங்களின் பின்னணி என்ன? அரசு முறை சந்திப்பு இல்லாமல், தனிப்பட்ட முறையில் யாரையாவது முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறாரா? என்று கண்காணிக்க ‘ரா’ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம் மத்திய அரசு.