திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் திருமண விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து அந்த திருமண விழாவில் பேசிய மு.க ஸ்டாலின், நகராட்சி தேர்தல் பரப்புரையைக் காணொளி வாயிலாக மேற்கொண்டது ஏன் என விளக்கமளித்துள்ளதோடு, நகராட்சி தேர்தல் வெற்றிவிழாவின்போது அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “தேர்தல் நேரத்தில் காணொளி காட்சியிலேயே பேசி முடித்துவிட்டேன், மக்களைச் சந்திக்க வருவதற்குத் தைரியம் இல்லை எனச் சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து மக்களைச் சந்திக்கத் தைரியம் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். கரோனா தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருப்பதால், நேரடியாகச் செல்லவில்லை. காணொளி வாயிலாகப் பிரச்சாரத்தை நடத்தினேன். தேர்தல் முடிந்து அதன் வெற்றிவிழா நடக்கும்போது, நிச்சயமாக, உறுதியாக எல்லா மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் கூறியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடந்து முடிந்துள்ள தேர்தலில், மிகப்பெரிய வெற்றியைப் பெறவுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.