கரூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அ.தி.மு.க.வில் அமைச்சர் விஜயபாஸ்கரும் நேருக்கு நேர் வேட்பாளர்களாக மோதுகிறார்கள். இருவரும் இன்று (15/03/2021) மதியம் தங்களது வேட்பு மனுக்களை கரூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலசுப்பிரமணியிடம் தாக்கல் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க.- அ.தி.மு.க.வே நேரடியாக மோதுகிறது. கரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 2011- ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியும் வகித்தார். பிறகு, 2016- ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் கரூரிலும் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியிலும் அ.தி.மு.க வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருவரும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.வில் செந்தில் பாலாஜி இருந்த போது விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் இரு துருவங்களாக இருந்தனர். செந்தில் பாலாஜிக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போக, விஜயபாஸ்கருக்குக் கிடைத்தது.
இப்போது தி.மு.க.வின் வேட்பாளராக செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க.வின் வேட்பாளராக விஜயபாஸ்கரும் நேருக்கு நேர் மோதுவது கரூர் அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது.