Skip to main content

ராமதாஸ் மௌனமும் கவனிக்கப்பட வேண்டும்: டி.டி.வி.தினகரன்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

எட்டுவழிச் சாலைத்திட்டம் நல்ல திட்டம் என்று சட்டமன்றத்திலேயே முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், இப்போதாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அத்திட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். மகிழ்ச்சிதான். அதேபோல, மக்களின் உணர்வுகளை மதிப்பதாகச் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தனது நிலைப்பாட்டை மாற்றாமல், அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்யாமல், இத்திட்டத்திற்கான தனது எதிர்ப்பை எடுத்துரைக்க வேண்டும். 


  Ramadoss - T. T. V. Dhinakaran



மாறாக மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் தனது வழக்கமான குணத்தால் இத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் தமிழகம் ஒருபோதும் அவரையும் இந்த அரசையும் மன்னிக்காது. அத்துடன் ஒரு பெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். 
 

இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப்போட்ட டாக்டர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, எதற்காகவும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார். இப்போது அவரது கூட்டணிக் கட்சியான பிஜேபி ஆளும் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கும் இந்த சூழலில் அவரது மௌனமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.


 

தனது கொள்கையில் உறுதியாக இருந்து அத்திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கப்போகிறாரா? அல்லது எப்படியாவது இத்திட்டத்தை கொண்டுவர விரும்பும் எடப்பாடியை பகைத்துக்கொண்டால், தனது கட்சிக்கு கிடைக்க வேண்டிய ராஜ்யசபா சீட் கிடைக்காமல் போகலாம் என்பதால் அமைதி காக்கப்போகிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இவர்களது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள், அப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்