தமிழக பாஜகவின் புதிய தலைவராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார் முருகன். அவர் பதவியேற்று 3 மாதங்கள் கடந்த நிலையில் தமிழக பாஜகவிற்கான மாநில நிர்வாகிகள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. கரோனாவின் தாக்கம் இந்தியா முழுவதும் வியாபித்த சூழலில், தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் நியமனங்களை கிடப்பில் வைத்திருந்தது பாஜகவின் தேசிய தலைமை.
இந்த சூழலில், கிடப்பில் வைக்கப்பட்ட தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து விவாதிப்பதற்காக கடந்த வாரம் டெல்லிக்கு முருகனை வரவழைத்திருந்தது பாஜக தலைமை. டெல்லி சென்ற முருகன், பாஜகவின் தேசிய தலைவர் நட்டா மற்றும் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார். அந்த சந்திப்பில் மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்த ஒரு பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முருகனிடம் ஆலோசித்துள்ளனர். யார் யாருக்கு எந்த பதவி கொடுப்பது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவிட்டு சென்னைக்கு திரும்பி விட்டார் முருகன். விரைவில் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் நியமன அறிவிப்பு வெளிவரவிருக்கிறது. இதனையறிந்து, நியமன பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என தமிழக பாஜகவினர் பலரும் அவரவர் சோர்ஸ்களில் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
அதேபோல, பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து பாஜகவின் தேசிய தலைவராக நட்டாவும், தேசிய அமைப்பு செயலாளராக பி.எல்.சந்தோஷும் நியமிக்கப்பட்டதை தவிர தேசிய அளவிலான நிர்வாகிகளும் நியமிக்கப்படததால் அதற்கான நியமனங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்கின்றன டெல்லி தகவல்கள்.