தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலையே நீடித்தது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கன்னியாகுமரி மக்களவை தொகுதி உள்ளிட்டவற்றை தி.மு.க. தருவதாகக் கூறியதாகவும், இதற்கு காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "தி.மு.க.- காங்கிரஸ் இடையே நாளை (07/03/2021) காலை 10.00 மணிக்கு தொகுதிப் பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகிறது. எத்தனை தொகுதிகள் என்ற விவரங்கள் நாளை காலை தெரியவரும்" என்றார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.