தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறன.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது அ.தி.மு.க. மேலும், அதற்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க.வுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இழுபறி நீடிக்கிறது. அதே சமயம், பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான கிஷன் ரெட்டி, தேர்தல் இணை பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே.சிங், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னையில் உள்ள இல்லத்தில் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர் சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அதன் தொடர்ச்சியாக இன்று (02/03/2021) சென்னையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி., வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோருடன் பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் நாளை (03/03/2021) கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு 24 முதல் 26 வரை சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்க உள்ளதாகவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பா.ஜ.க.வுக்கு தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.