நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யூனியனுக்கு மொத்தம் 12 கவுன்சிலர்கள். இதில் அதிமுக 5 கவுன்சிலர்களும், திமுக 3 கவுன்சிலர்களும், சுயேச்சைகள் 4 கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர்.
முறைப்படி அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் தலைவர் பதவிக்கு வர வேண்டும். ஆனால் அங்கு யூனியன் சேர்மனாக அதிமுகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால் அது முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள்தான்.
இதில் விருப்பமில்லாத மாவட்ட அமைச்சரான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவானி கருப்பண்ணன் தனது ஆதரவாளர்களிடம் பேசி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களாக வெற்றிபெற்றுள்ள அதிமுகவினர் யாரும் யூனியன் சேர்மனாக வரக்கூடாது, திமுகவிடம் பேசி சுயேட்சையை தலைவர் ஆக்கலாம் என முடிவுசெய்து அந்த யூனியனில் வெற்றிபெற்ற 4 சுயேச்சை உறுப்பினர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததார்.
வெற்றி பெற்ற மேலும் 3 திமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக சுயேச்சை 4, திமுக 3 என மெஜாரிட்டி வந்தது. யூனியன் சேர்மன் பதவிக்கு ஏழு பேர் போதும். அதனடிப்படையில் சுயேச்சை ஒருவருக்கு யூனியன் சேர்மன் பதவியையும். திமுகவில் வெற்றி பெற்ற ஒருவருக்கு யூனியன் துணைச் சேர்மன் பதவியும் வைத்துக்கொள்வது என அமைச்சர் கருப்பணன் மூலம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கட்சித் தலைமைக்கு அமைச்சர் கருப்பணன் அதிமுகவை தோற்க வைக்கிறார் என புகார் மனு கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளார். ஒரு அமைச்சரே அதிமுக உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு வராமல் தடுத்து சுயேச்சை ஒருவரை தலைவராக்கி திமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு துணைத்தலைவர் பதவி கொடுத்த வினோதமான செயல் ஈரோடு மாவட்டத்தில் ர.ர.க்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.