
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.வில் கோஷ்டி மோதலுக்கு என்றும் குறைவில்லை. மாதம் ஒரு பிரச்சனையென புதுசு புதுசாக உருவாகிக்கொண்டே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பெரிய ஒன்றியங்களைப் பிரித்து, பொறுப்பாளர்களை நியமனம் செய்துவருகிறது தி.மு.க. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியம், திருப்பத்தூர் ஒன்றியங்களை 'கிழக்கு – மேற்கு', 'வடக்கு – தெற்கு' எனத் தேவைக்குத் தகுந்தாற்போல் பிரித்து, புதிய ஒன்றியத்திற்கு எனப் பொறுப்பாளர்களை நியமித்தும், சில ஒன்றியங்களில் ஏற்கனவே உள்ள ஒ.செக்களை மாற்றியும் அறிவிப்பு செய்துவருகிறது.
அதன்படி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த காசி என்பவரை மாற்றிவிட்டு, அவருக்குப் பதில், சதிஷ் என்பவரை ஒ.செவாக நியமனம் செய்துள்ளது தி.மு.க. இதில் பதவி பறிக்கப்பட்ட திமுக ஒ.செ காசி, தனது ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள நிர்வாகிகளை தனது வேப்பல்நத்தம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வரவைத்து, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், "என்னை நம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சிலர் நன்றாக ஏமாத்திவிட்டார்கள், நான் என்ன தப்பு செய்தேன், என்னை எதற்காக ஒ.செ பொறுப்பில் இருந்து நீக்கினார்கள் எனத் தெரிய வேண்டும். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, நம் தி.மு.க. ஒ.செவாக இருந்த வீரமணியின் அண்ணன் அழகிரி, கட்சிமாறி வேலை செய்தது தெரியவந்து. அவரை, கட்சியில் இருந்து நீக்கி, என்னை ஒன்றியப் பொறுப்பாளராக நியமனம் செய்தது. நான் நன்றாகத்தானே தேர்தல் வேலைசெய்து வந்தேன், என்னை ஏன் நீக்கினார்கள் எனக் கண்ணீர்விட்டு அழுதார்." நீங்க கவலைப்படாதிங்க, தலைமையிடம் முறையிடுவோம், நியாயம் கிடைக்கவில்லையென்றால் நாம் கட்சிப் பணியில் இருந்து விலகி நிற்போம் என முடிவு செய்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளர் தேவராஜ் போன்றோருக்கு காரசாரமாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.