தி.மு.க தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, காஞ்சிபுரத்தில் தி.மு.கவின் பவள விழா பொதுக்கூட்டம் இன்று (28-09-24) நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான, வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “75 ஆண்டுகளாக திமுக வீறுநடை போடுகிறது. தேர்தலுக்காக மட்டும் செயல்படும் கட்சி திமுக அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கட்சி, இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப வாரிசு என்று பேசுகின்றனர். ஆனால், இது கருத்தியல் வாரிசு. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று முதல்வர் உறுதியாக உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும் பெரியார் வழியில் சென்று கொண்டிருக்கிறார். அறிஞர் அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். கலைஞர் மாநில சுயாட்சியை அழுத்தமாக நடைமுறைப்படுத்தினார். கலைஞர் தான், சமத்துவபுரம் திட்டத்தை கொண்டு வந்து சாதித்தார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை முதன்முறையாக திமுக அரசு கொண்டு வந்தது. திமுக, இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. பெரியார் தான் முதன் முதலில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஏற்படுத்தினார். பெரியார் கொள்கையில் திமுக தொடர்ந்து இயங்கி வருகிறது.
கலைஞர் கூட, தனது ஆட்சியை அண்ணாவின் ஆட்சி என்று பேசினார். ஆனால், திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று முதன்முதலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தினார். தி.மு.க, சமூக நீதி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்க மறுத்து உறுதியுடன் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேராளுமை வாய்ந்த தலைவராக திகழ்கிறார். கொள்கை அடிப்படையில், திமுக கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. எந்த சக்தியாலும், இருமொழிக் கொள்கையை மாற்றிவிட்டு மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது. இரட்டை குழல் துப்பாக்கியுடன் மூன்றாவது குழலாக திமுகவுடன் இணைந்து விசிக இருக்கும். திமுகவுடன் இணைந்து சனாதன சக்தியை எதிர்க்க கரம் கோர்ப்போம். தேர்தலுக்குப் பிறகும் கூட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இருப்பதற்கு முதல்வரின் பங்கு முக்கியமானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அரசு நடக்கிறது. ” என்று தெரிவித்தார்.