சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதசார்ப்ற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை குமராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் துவக்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசுகையில், தேசத்தின் தீங்கு மோடியை விரட்டி அடிக்க அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு அளித்து வெற்றியடைய செய்ய வேண்டும். தமிழகத்தின் தீங்கு எடப்பாடி பழனிசாமி அரசு விரட்டியடிக்கப்படும். இந்த தொகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு அளிக்கவேண்டும். திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆலோசனையின் பேரில் இந்த தொகுதியிலுள்ள மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்வேன் என்று வாக்குசேகரித்தார்.

இதனை தொடர்ந்து வரகூர்பேட்டை, சிவபுரி, பெராம்பட்டு, வல்லம்படுகை, கடவாச்சேரி, உசுப்பூர், சிதம்பரம் நான் முனிசிபல், சி.தண்டேஸ்வரநல்லூர், நாஞ்சலூர், சிவாயம், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாக்குசேகரித்து சென்றார். வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று தொகுதியின் பிரச்சனையை அவரிடம் கூறினார்கள். பல இடங்களில் மேளதாள முழங்க பட்டாசு வெடித்து வரவேற்றனர்.