அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், எதிர்கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும். ஆட்சி கலைந்து விடும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. 28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது.
தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் தி.மு.க.காரர்களிடம் கேளுங்கள்.
ஜெயலலிதா ஆட்சியேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டினை இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரி மாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா? முடியாது, ஏனென்றால் மக்கள் அனைவரும் திமுக கட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இவ்வாறு பேசினார்.