திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள தொல். திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அக்கட்சியின் தலைவராக உள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாவளவன் (61), சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் எனப் பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். ஆதிதிராவிட மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல்; தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல்; சாதிய அடக்குமுறைக்கு எதிராகக் கருத்திடுதல்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல்; இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும். இவர் சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 5 முறை போட்டியிட்டு, இரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் 6 ஆவது முறையாக திமுக கூட்டணியில் தனிச் சின்னமான பானை சின்னத்தில் அவர் களம் காண்கிறார். சென்னையில் தங்கியுள்ளார்.
அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக சார்பில், சிதம்பரம் தொகுதியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராகப் பணியாற்றி வரும் மா. சந்திரகாசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1952 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்துள்ளார். முதுகலை பட்டம் பெற்ற இவர், கட்சியின் செந்துறை ஒன்றிய கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2006 வரை செந்துறை ஒன்றிய குழு பெரும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் வேளாண்துறையில் உதவி வேளாண் அதிகாரியாகப் பணியாற்றி வந்த நிலையில், கட்சியின் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வருகிறார்.
கட்சி சார்பில் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன் அரியலூர் மாவட்ட செந்துறை வார்டு பகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவரது குடும்பம் அதிமுக கட்சி குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. இவர்கள் வேட்பாளரை அறிவிக்கவில்லை.