Skip to main content

குடிதண்ணீரில் இந்தி; திருமாவளவன் எம்.பி. ஆவேசம்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

thirumavalavan condemns Hindi imposition water bottle

 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான்  இந்தி மொழி என்றாலே தீப்பொறி பறக்கிறது. என்ன காரணம் என்றால் இதற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக் கடந்த 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு ராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் என அறிவித்தார்.

 

அதற்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத ராஜாஜி அரசு 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டது. இதனால் வெகுண்டெழுந்த தனித் தமிழ் இயக்கங்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் வீதிக்கு வீதி போராட்டத்தில்  குதித்தனர். இந்தப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அன்றைய ராஜாஜி அரசு திணறிப் போனது. ஒரு கட்டத்தில், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக ராஜாஜி அரசு அறிவித்தது. 

 

தொடர்ந்து 1965 இல் நடந்த இந்தி திணிப்பின் போதும் மக்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி போராடினார்கள். அதன்பிறகு 1968 இல் முன்னாள் முதல்வர் அண்ணா இருமொழி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றினர். 1986 இல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் இந்தி மொழிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இப்படி தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாநிலக் காட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து மத்திய அரசு இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் 'பாணி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தியில் 'பாணி' என்றால் தண்ணீர் என்று பொருள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த தண்ணீர் பாட்டில் புகைப்படத்தை பகிர்ந்து, "சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை 'பாணி' என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ? இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான சங்பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்