Skip to main content

“தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க முயல்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Thirumavalavan alleges BJP is trying to disrupt law and order in Tamil Nadu

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்திருந்தார். 

இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதனை திட்டமிட்டவர்கள் இதனை நடைமுறைப்படுத்திய கூலிக்கும்பல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பா.ஜ.கவுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகவே, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூட ஒரு அரசியல் செயல் திட்டம் வாய்ப்பு இருப்பதாக வி.சி.க கருதுகிறது. ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இருக்கக்கூடிய சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் குரலாக இருந்தது. ஆருத்ரா நிறுவனத்திற்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் பா.ஜ.க கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்கள். 

ஆம்ஸ்ட்ராங் கொலையில், ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது. பா.ஜ.க இதில் வலிந்து சி.பி.ஐ விசாரணை கோருகிறது. இது போன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தக்கூடியவையாக உள்ளன. அவர்களின் செயல் திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் மீது கருத்தியல் விமர்சனங்களை வைக்கலாம். அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்களின் நோக்கங்களை உணர முடிகிறது. ஆகவே, சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். 

நீட் தேர்வு குறித்தும், திருமண சட்டங்கள் சீராய்வு தொடர்பாக மனு ஒன்றை அளித்திருக்கிறோம். நீட் விவகாரத்தில் தற்போது நாடு முழுவதும் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடந்துள்ளன. அதை மூடி மறைக்க பா.ஜ.க முயல்கிறது. நீட் எதிர்ப்பு நடவடிக்கையாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வரிடம் வலியுறுத்தினேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்