மதுரை பழங்காநத்தத்தில் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய சரத்குமார், “நாம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும், உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். அது நடக்குமா என்பது அடுத்த சட்டமன்ற தேர்தலில் தெரிய வரும். இந்த காலகட்டத்தில் பல்வேறு போதைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2025 ஆம் ஆண்டில் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அதனால் மனித வளத்தைக் கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகள் செய்யும் சதிதான் இது.
நான் 70 வயதைத் தொடவுள்ளேன். ஆனால் இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். நான் இன்னும் 150 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னை முதல்வர் அரியணையில் ஏற்றினால் சொல்வேன்.
10 ஆண்டுகாலம் அதிமுகவிற்கு உழைத்துள்ளோம். மரியாதை கொடுத்துள்ளார்களா சிந்தித்து பாருங்கள். நாங்கள் நின்ற 36 தொகுதிகளில் 26 இடங்களில் நாம் 5 ஆயிரம், 10 ஆயிரம், 12 ஆயிரம் என வாங்கிய இடங்களில் அதிமுக 2000, 3000 வாக்குகளில் தான் தோற்றது. அதனால் தான் ஆட்சியை இழந்தது. 10 ஆண்டுகள் உழைத்துள்ளோம். அதிமுக ஒன்றும் செய்யவில்லை. கலைஞர் எம்.பி. என்ற பொறுப்பை கொடுத்தார். எனக்கு மரியாதை செய்தார். அதிமுக ஒன்றும் செய்யவில்லை. கறிவேப்பிலை போல் பயன்படுத்தினர். சாம்பார் நன்றாக இருந்ததா? என்பதுதான் முக்கியம்” என்றார்.