எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினர்.
இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் கூட்டியது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சுண்டல், காபி எல்லாமா விற்றுக்கொண்டு இருப்பார்கள். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத 300 பேரைக் கூட்டி இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் நடத்துவது தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஜெயலலிதா உடன் அரசியல் செய்தவர்கள் இங்கு தான் உள்ளனர். கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குக் கூட்டியது நானும் ரவுடி தான் என்பது போல் உள்ளது” எனக் கூறியுள்ளார்.