தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு அண்மையில் சென்று வந்த நிலையில், நேற்று உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், “நாம் கேட்பதாலோ அல்லது நேரில் சென்று பேசுவதாலோ தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியாது” என தமிழக ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக அமைச்சர்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ''ஆளுநர் அப்படி என்ன தவறாகப் பேசினார். முதல்வர் வெளிநாடு போனது தவறு என்று சொன்னாரா. அது டூர் சார். நீங்கள் போனது தப்பு என்று சொல்லவில்லை. துணைவேந்தர்களுக்கு மத்தியில் ஒரு அறிவுரையை ஆளுநர் பேசுகிறார். அப்படியென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வந்திருக்கு. முதல் ஆயிரம் ரேங்கில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் கூட இல்லை. அதே போல பத்தாயிரம் ரேங்கில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 200 பேர் தான் உள்ளனர். இதுதான் அரசு பள்ளியின் நிலைமை. இதை அறிவுறுத்தி ஆளுநர் நமது கல்வி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என துணைவேந்தர்கள் மத்தியில் பேசினார். இதில் தப்பில்லை'' என்றார்.