Skip to main content

“வல்லமை படைத்த தலைவர்கள் யாரும் அதிமுகவில் இல்லை..” - ஓ.பி.எஸ். ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

"There are no powerful leaders in ADMK." - O.P.S. Supporter K. P. Krishnan

 

பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் அம்மா உணவகம் என்ற பெயரை பெரியார் உணவகமாக மாற்றி இலவசமாக உணவு தருவோம் என குதர்க்கமாக பேசி உள்ளார்.

 

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தான் திமுக காலத்தில் சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்கி வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என  தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளில் நாங்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகிறோம். மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நான் கருதுகிறேன். வைத்தியலிங்கம் சசிகலா சந்திப்பு இயல்பானது” என்று தெரிவித்தார். 

 

மேலும், கட்சி அலுவலகத்தில் ஓ.பி.எஸ் படம் நீக்கியது குறித்த கேள்விக்கு? பதில் அளித்த கு.ப. கிருஷ்ணன், “ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். அந்தப் பணிகளை தான் தற்பொழுது இ.பி.எஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதிமுக அலுவலகம் எங்கள் கைக்கு வந்து விடும். அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும். பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்ட விதிப்படி இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. ஆகையால் இ.பி.எஸ் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதும் செல்லாது. 

 

எதிர்காலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த பதவியோடு நடத்துவோம். அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி, கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சட்ட விதிகளை உருவாக்கி வழங்கி உள்ளார். அதன்படியே நாங்கள் பயணிப்போம். எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை. அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும். அதிமுகவின் சட்ட விதிகளை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். 

 

எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இ.பி.எஸ் அவருடைய வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லட்டும். பின்னர் மீண்டும் திரும்பி வருவார். காவலரிடம் சாவி இருக்கிறது என்பதற்காக அலுவலகம் அவருக்கு சொந்தமாகி விடுமா?” என்று ஆவேசப்பட்ட கு.ப.கிருஷ்ணன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அலுவலக காவலரோடு ஒப்பிட்டு பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்