அண்ணல் அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் முதல் துறைமுகம் வரை நேற்று (06.12.2021) நடைபயணமாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசும்போது, “திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பிரிவினைவாதம், கஞ்சா விற்பனை, சுரண்டல், லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தலைதுாக்கியுள்ளன, அவற்றைத் தடுக்க வேண்டும்.
மக்களின் கோபத்திற்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. கேரளாவில் கரோனா தடுப்பூசி முகாம்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்களில் தமிழக அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி தன் திட்டங்களைப் போல வழங்குகிறது. தமிழகத்திலும் அரசின் திட்டங்களில் ஜனநாயக முறைப்படி முதல்வர் படத்துடன் பிரதமர் படமும் இடம்பெற வேண்டும். தமிழக அரசு நிறுவனமான 'எல்காட்' மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து அரசுக்குத் தரமாக வழங்க வேண்டும். ஆனால் அரசு அந்த நிறுவனத்திடமிருந்து ஒரு பொருள் கூட வாங்காமல் கமிஷன் கிடைப்பதால் தனியாரிடம் வாங்குகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ. செயலர் பாலகிருஷ்ணன் போல அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக அல்ல. அவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் வியாபார பொருள் மட்டும்தான். ஆனால் பாஜகவுக்கு அப்படி இல்லை. அம்பேத்கர் பிறந்த, படித்த, வாழ்ந்த இடங்களான ம.பி., லண்டன், நாசிக், மும்பை, டெல்லி உள்ளிட்ட பஞ்சதீர்த்தம் எனப்படும் ஐந்து இடங்களில் அவருக்கு நினைவிடம் கட்டிய பெருமை பாஜகவையே சாரும். அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக் கூடியது திருமாவளவன் கட்சி.
பாஜக அனைவருக்குமான கட்சி. எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரான கட்சி அல்ல. ஒரு பக்கம் ராமர் கோவிலும் இருக்க வேண்டும். மற்றொரு பக்கம் இஸ்லாமிய மக்களுக்கு மசூதியும் இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி.” இவ்வாறு அவர் கூறினார்.