தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் இந்திக் கொள்கைக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், “நம் தாய் மொழியை வளர்க்கவும் பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமே திராவிட இயக்கம் தோன்றியது. இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. இது மொழிப்போராட்டம் மட்டும் அல்ல. தமிழினத்தை தமிழர் பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தொடரத்தான் செய்வோம். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக இந்தி மொழித் திணிப்பை தனது வழக்கமாகக் கொண்டுள்ளது.
ஆட்சி நிர்வாகத்தில் இருந்து கல்வி வரை இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியை திணிக்கத்தான் என நினைக்கிறார்கள். ஒரே நாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இனத்தின் மொழியை அழிக்கப் பார்க்கிறார்கள். மாநில மொழிகள் என ஒப்புக்காக சொல்லுகிறார்களே தவிர முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்கள் இதயம்.
தமிழை காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, அரசியலமைப்பு சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்டிட தமிழகம் மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.