கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விவகாரம் ஜனவரி மாதத்தில் இருந்து இருக்கிறது. இது குறித்து இன்று வரை மாநில அரசும், தமிழக முதல்வரும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது பெரிய பிரச்சினையாக வெளிவந்த பிறகு நடவடிக்கை எடுக்கின்றனர். வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடத்தான் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களை பார்த்து விட்டு அங்கு இருப்பவர்கள் வீட்டிற்கு திரும்பி வர சொன்னதாலும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனையை முதல்வர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த பிரச்சனை தற்போது ஏற்பட்டு இருக்காது. வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவு இருக்கின்றனர். கோவை மாவட்ட பகுதியை மாநில அரசு பாரபட்சமாக நடத்துவதை போன்று தற்போது ஏற்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையையும் பாதிக்கட்டும் என்று தமிழக அரசு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அமைச்சர்களே பானிபூரி விற்பனை குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தான்.
ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு செல்வதும், வேறு கட்சியிலிருந்து பாஜகவிற்கு வருவதும் அரசியலில் வழக்கமான ஒன்றுதான். தற்போது கட்சியை விட்டு விலகிய பா.ஜ.கவை சேர்ந்த சில நிர்வாகிகள் ஒரு விஷயத்தை கூறி விட்டு கட்சியை விட்டு போயிருக்கின்றனர். அவ்வாறு கட்சியை விட்டு வெளியில் செல்லும்போது அவர்களின் கருத்துக்களைத் தான் சொல்வார்கள். இதனால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக புதியவர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.