அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் என இரு தரப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு தரப்பும் அதிமுக தங்கள் கட்சி என உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ், தனது தரப்பு ஆதரவாளர்களுடன் கட்சி பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நிரந்தர பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவை நியமித்தோம். ஆனால் அதை ரத்து செய்தவர்களை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கழகத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்களை நிர்ணயம் செய்யும் பொறுப்பு தொண்டருக்குத்தான் இருக்கும். இதை எப்போதும் மாற்ற விடமாட்டோம். ஒற்றுமையாக இருங்கள் என நாம் சொல்லுகிறோம். ஒற்றுமையாக இருக்க வேண்டாம் என ஒருவர் சொல்லுகிறார். ஒற்றுமைக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லையாம். உங்களுக்கு தைரியமிருந்தால் தனிக் கட்சி வச்சு நடத்திப் பாருங்கள்.
பழனிசாமி எம்ஜிஆரை நேரில் சந்தித்துப் பேசியது உண்டா? நான் பொறுப்பேற்ற அடுத்த வருடம் ஜெயலலிதா என்னிடம் 2 கோடி தேவைப்படுகிறது எனக் கேட்டார். கழக நிதியில் இருந்து எடுத்துக்கொள்கிறேன் எனச் சொன்னார். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் எனக் கூறி செக்கில் உடனடியாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன். இரண்டு மாதங்களில் அந்தப் பணத்தை மீண்டும் கொடுத்துவிட்டார். இப்படிப்பட்ட தலைவர் நம் தலைவர். அவரின் வழிகாட்டுதலில், 0 வாக இருந்த பணம் இன்று 256 கோடி ரூபாய்க்கு இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் வட்டியை வைத்து இன்று கட்சியை நடத்திக்கொண்டுள்ளோம். இந்தப் பணம் அனைத்தும் தொண்டர்கள் கொடுத்த பணம்.
சட்டமன்றத்தில் டிடிவி, எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார். 36 எம்.எல்.ஏக்கள் டிடிவி உடன் சென்றார்கள். தங்கமணி, வேலுமணி என்னிடம் ஓடி வந்தார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் எனச் சொன்னார்கள். திடீரென டிடிவி உடன் சென்ற எம்.எல்.ஏக்களில் 36 பேர் 16 ஆகக் குறைந்துவிட்டனர். தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் 9 பேர் தான் வெற்றி பெற முடிந்தது. இதனால் ஆட்சிக் கவிழும் அபாயம் இருந்தது. நான் அவர்களோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்த்தால் அந்த நேரத்தில் சிறு மகிழ்ச்சி கிடைக்கும் ஆனால் ஆட்சியை கவிழ்த்த கெட்ட பெயர் உருவாகிவிடும். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்தேன்.
ஜெயலலிதாவிடம் வேலை பார்க்கும்போது தீ மாதிரி வேலை செய்ய வேண்டும். 100 சதவீதம் அவர் சொன்ன வேலைகளை முடிக்கவேண்டும். அதில் கொஞ்சம் குறைந்தாலும் வீட்டிற்கு அனுப்பிவிடுவார். 18 வருடங்கள் அவருடன் இருந்து வேலை பார்த்துள்ளேன். அதில் அவர் எனக்கு கொடுத்த பதவியில் தகுதி நீக்கம் செய்ததே இல்லை” எனக் கூறினார்.