திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.
டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.
செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.