வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாகை நாடாளுமன்ற தொகுதி, தோப்புத்துறை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நாடாளுமன்ற தேர்தல் திகழ்கிறது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வாக்காளர்கள் வாக்குச்சாவடியை நோக்கி திரள வேண்டும். தங்களின் ஜனநாயக கடமை தவறாது செய்ய வேண்டும்.
இன்று தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு, அமைச்சர்கள் கூட நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் இரண்டு மணி நேரம் இயந்திர கோளாறு என்றால், அங்கு இரண்டு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
ஏற்கனவே மக்கள் தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். எனவே இதுபோன்ற இயந்திர கோளாறு ஏற்படாத வண்ணம் உரிய முன் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.