"டாஸ்மாக் கடைகள் இரவு வரை இருப்பதால் குடிமகன்கள் நடமாட்டம் காலை முதல் இரவு வரை இருக்கிறது. குடிமகன்களின் கூட்டத்தை தடுக்க வேண்டும் ஆகவே நேரத்தை குறைக்க வேண்டும்" என கூறுகிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையிலிருந்து வெளியேறி சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் மக்களால் புதிதாக கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரோனாவை ஒழிக்க துணைநிற்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சங்கம் தாமாகவே முன்வந்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதேபோல பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்க வேண்டும். இதனால் குடிமகன்கள் மதியத்திற்கு மேல் வெளியில் நடமாடுவது தவிர்க்கப்பட்டு, நோய் கட்டுக்குள் வர வாய்ப்பாக அமையும். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைந்து அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.