முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (18.01.2021) டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகள் கேட்கிறது என்ற கேள்விக்கு, ‘தேர்தல் தேதி அறிவித்தப் பிறகுதான் இவையெல்லாம் முடிவு செய்யப்படும்’ என்றார். அமித்ஷாவுடனான சந்திப்பில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை இருந்ததா என்று கேட்டபோது, ‘அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்துதான் சந்தித்தேன்’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக பேசப்பட்டது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. அப்போது பத்தாயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற தொகுதிகளின் பட்டியலை பாஜக தயாரித்துள்ளது.
விருகம்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், வேதாரண்யம், திருவாடானை, ராதாபுரம், மதுரை கிழக்கு, கன்னியாகுமரி, நாகர்கோவில், விளவங்கோடு உள்ளிட்ட 38 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயார் செய்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக பாஜக.
மேலும் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் 90 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக இருந்திருப்பதையும், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மேலிடத்திற்கு குறிப்பிட்டுள்ளாராம்.