ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக தேதி ஒதுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக வழக்கறிஞர் அணி தலைவர் பாலு உள்ளிட்ட பலர் இடம்பெற்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தற்பொழுது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்த வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. சமூகநீதியைப் பின்பற்றாமலும் முறையான இட ஒதுக்கீடு அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமலும் இருந்ததால் தற்காலிகமாக அந்த இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.