“இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. சிவசேனவைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல், பீகாரில் நிதிஷ்குமார் கட்சியைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அடுத்த தேர்தலில் பலகீனபடுத்திவிட்டு, அதைத் தாண்டி பா.ஜ.க. வரவேண்டும் என நினைக்கிறார்கள்” என்று, திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மோடி அரசு விவசாயிகளை வஞ்சித்துவருகிறது. விவசாயிகளைப் புறக்கணித்த, துரோகம் செய்த எந்த அரசும் வளர்ந்ததாக வரலாறு இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும் என அறிவித்த பிறகு, அந்தக் கூட்டணியின் நிழலில்கூட நாங்கள் ஒதுங்கமாட்டோம்.
திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் பாதுகாக்க வேண்டும். தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தான் ஆட்சி செய்ய வேண்டும். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம், திராவிடக் கட்சிகள் ஆண்டால்தான் சிறப்பாக இருக்கும்; மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. சிவசேனவைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல், பீகாரில் நிதிஷ்குமார் கட்சியைப் பலகினபடுத்தினார்கள். அதைப்போல் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அடுத்த தேர்தலில் பலகீனபடுத்திவிட்டு, அதைத் தாண்டி பா.ஜ.க. வரவேண்டும் என நினைக்கிறார்கள். இது வடஇந்தியா அல்ல, இது தமிழ்நாடு. பா.ஜ.க. தமிழக தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும். இந்தியா முழுவதும் வாக்கு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தி தில்லு முல்லு செய்து வருகிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதையும் மீறி பா.ஜ.க.விற்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
களத்தில் உழைப்பவர்கள் அரசியல் பேசலாம். கலைத்துறையில் ஓய்வுபெற்ற பிறகு, மேக்கப் அரிதாரங்கள் நீடிக்காது என்ற பிறகு அரசியலுக்கு வருகிறோம் என்று சிலபேர் வருவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க.வில் யாருடைய பேச்சைக் கேட்கிறார்கள் என்றால் கே.பி.முனுசாமி பேச்சைத்தான் கேட்கிறார்கள். அவர்தான் திராவிட இயக்கத்தின் பார்வையோடு விமர்சனம் வைக்கிறார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் ஓடக்கூடிய டெல்லி சாலையில், விவசாயிகள் தற்போது டிராக்டர்கள் பேரணி நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். மத்திய அரசு அதை வெறும் டிராக்டர்களாக கருதக்கூடாது, விவசாயிகளின் பீரங்கிகளாக கருதவேண்டும். விவசாயிகளை அழிக்கக் கூடிய எந்த அரசும் உலகில் வெற்றி பெற்றதில்லை என்பதை பிரதமர் நரேந்திரமோடி புரிந்துகொண்டு, சர்வாதிகார போக்கை கைவிட்டு விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வருகிற 21ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் பச்சை கொடி பேரணியில் நாங்களும் பங்கு பெறுவோம்.
தமிழ் நாட்டு மக்களின் உரிமைகள், தமிழர்களின் வாழ்வாதரங்கள், தமிழ் மொழியின் பண்பாடுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கக்கூடிய கூட்டணியில் நிச்சயமாக மனிதநேய கட்சி கூட்டணி வைக்கும். தமிழ்நாட்டினுடைய நலனைக் கபளிகரம் செய்யக் கூடிய எந்தக் கூட்டணியிலும் இடம்பெற மாட்டோம்” எனத் தெரிவித்தார்.