டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென்று குறைத்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதையும், பிரதமர் மோடி ரக்ஷ பந்தனுக்கு பரிசாக அளித்து இருப்பதாக கூறுகிறார்கள். இதை நான் மக்கள் கைகளில் போட்ட விலங்கை தளர்த்தி இருப்பதாகவே பார்க்கிறேன்.
பிரதமர் மோடி, இந்திய மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. எப்போதுமே விலை நிர்ணயம் என்பது மூலப்பொருள் என்ன விலை? அதை உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதற்கான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றை மதிப்பிட்டுத் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என விற்றது. அன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.70, டீசல் விலை ரூ.60, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 400க்கு வழங்கினார். ஆனால், இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 70 டாலராக விற்கப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரப்படி சிலிண்டரின் விலையை ரூ. 200க்கு தான் வழங்க வேண்டும். ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200க்கு விற்றுவிட்டு தற்போது ரூ. 200 குறைத்து இருப்பதை விட ஏமாற்று வேலை வேறு இருக்க முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில், நீட் தேர்வுக்கான வரைவு திட்டத்தை வெளியிட்ட போதே ராகுல் காந்தி அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். விரும்புகிற மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம், விரும்பாத மாநிலங்கள் நீட் தேர்வை விட்டு விடலாம் என்று ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தில் ஏன் நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம் என்றால், இங்கு 90 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளியில் மாநில பாடத் திட்டத்தைக் கொண்டு மாணவர்கள் படிப்பதால் தான் அதற்கு விலக்கு கேட்கிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு காரணம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற அரசியல் சாசனம் மீதான நம்பிக்கையில் தான்.
காங்கிரஸ் கட்சியை வெளியேற்றினால் திமுகவிற்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சீமான் கூறியிருப்பதற்கு ஒரே வரியில் தான் பதில் சொல்ல விரும்புகிறேன். அதாவது, சீமானை ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் பார்க்கிறேன். ஒரு படத்தில் வடிவேலு, ‘நானும் ரவுடி தான்; நானும் ரவுடிதான்’ என்று கூறுவார். அதுபோல் தான் சீமானுடைய கருத்தும் உள்ளது. அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.