நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தமிழகத்தில் தோல்வி அடைந்தது. அதனை கூட்டணியில் சேர்த்த அதிமுகவும் மண்ணை கவ்வியது. தோல்விக்கு பிஜேபியை கூட்டணியில் சேர்த்தது தான் காரணம் என்பதை பின்னர் உணர்ந்து கொண்ட அதிமுக, அடுத்து வந்த வேலூர் இடைத்தேர்தலில் பிஜேபியை கண்டுகொள்ளவில்லை. முடிந்தவரை மோதிப் பார்த்து எப்படியாவது வேலூர் கோட்டையை பிடித்து விட வேண்டும் என மனக்கோட்டை கட்டியது அதிமுக. ஆனால், அங்கும் தோல்வி தான் கிட்டியது.
"பிஜேபியோடு இனி ஒட்டும் வேண்டாம், உறவு வேண்டாம் என்று தூக்கி எறிந்தால், வழக்குகளை காட்டி பயமுறுத்துவார்கள் என்ற அச்சம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தது. அதனால், அவர்கள் ஆட்டுவித்த ஆட்டத்திற்கெல்லாம் ஆடினோம். அதன் விளைவு 37 உறுப்பினர்கள் இருந்த மக்களவையில் இப்போது ஒரு உறுப்பினர் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்." என்பதை உணர்ந்த அதிமுக இந்தமுறை பிஜேபியை கண்டுகொள்ளவில்லை.
நாங்குநேரியை திமுக காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த உடன், அதில் அதிமுக கூட்டணியில் நாம் போட்டியிட்டால் நல்லா இருக்கும் என்ற நப்பாசை பிஜேபிக்கு இருந்தது. அதுதொடர்பாக அரசல் புரசலாக பேச்சு அடிபட்டபோது, "இதுகுறித்து எங்களது கட்சித் தலைமை முடிவு எடுக்கும்" என்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதே பொன்னார், நாங்குநேரிக்கு அதிமுக வேட்பாளரை அறிவித்தபிறகு, திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் நாங்குநேரியை கேட்கவில்லை. கேட்டதாக தகவல் பரப்பப்பட்டது" என்று அப்படியே வார்த்தை ஜாலத்தை மாற்றினார். அதே நாளில் தான் கேப்டன் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் வைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் அங்கம் வகித்த த.மா.கா, பா.ம.க, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அதிமுகவுக்கு இடைத் தேர்தல் ஆதரவு என்று சொல்லிவிட்டது. நாங்குநேரியில் 2011-ல் சமத்துவ மக்கள் கட்சியின் எர்ணாவூர் நாராயணன் (இப்போது அவர் சமத்துவ மக்கள் கழகம்) அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார்.
இதற்கு இந்த தொகுதியில் உள்ள நாடார் சமூக ஓட்டுக்களே காரணம். அவர்கள் தான் மெஜாரிட்டி. இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தருகிறது என்றாலும், நாங்குநேரியில் பனங்காட்டுப்படை சார்பில் ஹரி நாடார் என்பவர் களம் இறங்குகிறார். இதனால், நாடார் சமூக வாக்குகள் பிரிந்துவிடுமோ என்ற அச்சமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியையும் அதிமுக சீண்டவில்லை. "நாடாளுமன்ற தேர்தலோடு எங்களுடன் வைத்திருந்த கூட்டணி முடிந்துவிட்டதாக நினைக்கிறது அதிமுக. எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் ஓரிருநாளில் டாக்டர் அய்யா அறிவிப்பார்கள்" என்று புதிய தமிழகம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பிஜேபியிடம் இந்த நிமிடம் வரை அதிமுக ஆதரவு கேட்கவும் இல்லை. அவர்களும் ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் தயவு தேவையில்லை என்று அதிமுக நினைத்துவிட்டது என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதற்கிடையே, புதுச்சேரியில் அதிமுக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து பிஜேபி தனித்து களம் இறங்குவதாக அறிவித்துள்ளது. ஆக..அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம்.!