Skip to main content

உணர்வாளர்கள் கேட்டது எழுவர் விடுதலை. - கவர்னர் தந்ததோ மூவர் விடுதலை.

1991


முதல்வராக இருந்த, மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆட்சிக்கு வந்த காலக்கட்டம். மாதச்சம்பளம் 1 ரூபாய் பெருகிறேன் என அறிவித்துவிட்டு ஆட்சி நடத்தினார். ஆட்சிக்கு எதிராக பேசினால் குண்டர்கள் வீட்டுக்கு வந்தார்கள், எதிர்கட்களின் வீடுகளுக்குள் போலிஸ் புகுந்தது, ஜெவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் ஆசிய கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஒத்தை ரூபாய் சம்பளத்தில் இது எப்படி சாத்தியமானது ?.

 

jj

 

 

1996


தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வராக இருந்த, மறைந்த கலைஞர் அவர்கள். விசாரணைக்கு உத்தரவிட்டார். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவானது. அதேப்போல் கொடைக்கானலில் இருந்த ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல்க்கு வரம்புகளை மீறி 7 மாடிகள் கட்ட அனுமதி தந்த விவகாரமும் வழக்காக பதிவானது. இப்படி என்னற்ற வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஆதாரங்களோடு பதிவு செய்தன. 

 

2000.


கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து தொடரப்பட்ட ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பு 2000 பிப்வரி 2-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் வழங்கினார். அதில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறார். ஒரு முன்னாள் முதல்வருக்கு கடுங்காவல் தண்டனை இந்தியாவில் அதுதான் முதல்முறை. இதைக்கேட்டு அதிர்ச்சியானார் ஜெ. களத்தில் இறங்கிய அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல், பேருந்துகள் உடைப்பு, கடைகள் உடைப்பு, தீவைப்பு என செய்தனர். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது.

 

dd

 

 

உயிரோடு எரிக்கப்பட்ட 3 மாணவிகள்.

 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர், கல்வி சுற்றுலா முடிந்து இரண்டு பேருந்துகளில் கோவைக்கு திரும்பிக்கொண்டுயிருந்தனர். தருமபுரி வந்த போது, அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர். நகரில் பெரும் பதட்டம். பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்துகளை நிறுத்திவிட்டு, பேராசிரியர்கள், பல்கலைகழக பதிவாளரை தொடர்புக்கொண்டு விவரத்தை கூறியதும் நீங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள் என தகவல் வந்ததும் பேருந்துகளை அங்கு திருப்பினர். 3 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்தில் செல்லும்போது சாலைமறியல் செய்துக்கொண்டு இருந்தனர் அதிமுகவினர்.


 

அதிமுக புள்ளி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட அனைத்து வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் வந்த வாகனங்களும் ஒரு புளியமரத்தின் கீழ் நிறுத்தப்படுகிறது. சில மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே செல்கின்றனர். சுமார் 20 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள்ளேயே இருக்கின்றனர். கல்வீச்சுக்கு பயந்து அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்படுகிறது. அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கையில் கொண்டு வந்துயிருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதி, கதவு பகுதி என அனைத்து வழியிலும் ஊற்றி தீ வைத்துவிட்டு இரு பெட்ரோல் பாம்களையும் பேருந்துக்குள் வீசுகின்றனர். அடுத்த சில நிமிடங்களில் 3 மாணவிகளின் உடல்கள் கரிக்கட்டையாக கிடத்திவைக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கைவிட்டார் ஜெயலலிதா.


 

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்) ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல், மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார். 386 பேர் அரசு சாட்சிகளாக நியமிக்கப்பட்டனர்.


 

2001ல் வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அமர்ந்திருந்தது. ஜெ முதல்வராக இருந்தார். இதனால் சாட்சிகளாக இருந்த குற்றத்தை பதிவு செய்த விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் உட்பட அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட 22 பேருமே பிறழ் சாட்சியாக மாறி பல்டியடித்தனர். இதனால் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க அதன்அடிப்படையில் சேலத்துக்கு மாற்றப்பட்டது.சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் பஸ் எரிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் உள்ள 386 சாட்சிகளில், 123 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, அதன்படி 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.2007 பிப்ரவரி 17ந்தேதி தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கியது. 2007 டிசம்பர் 7ந்தேதி இந்த தண்டனைகளை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.இவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே முயற்சிகளை எடுத்தார். ஆனால் பொதுமக்கள் மீதான பயத்தால் அதனை செயல்படுத்த முடியவில்லை. அதோடு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்மென தமிழ் அமைப்புகளின் வேண்டுக்கோள், பெரும்பான்மை பொதுமக்களின் கருத்தும் அதுவே. அது நடக்காமல் இவர்களை விடுதலை செய்தால் சர்ச்சை வரும் என தயங்கினார். அந்த தயக்கம் எதுவும்மில்லாமல் விடுதலை செய்துள்ளார் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்