Skip to main content

பாமக வேடிக்கை பார்ப்பது ஏன்? ராஜேஸ்வரி ப்ரியா 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

பாமகவில் 2017 மார்ச் மாதம் முதல் ''பாமக இளைஞர் சங்க செயலாளர்'' பதவி வகித்தவர் ராஜேஸ்வரி பிரியா. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார். 
 

இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், 

 

Rajeshwari Priya


 

நான் பாமகவில் இருந்து வெளியே வந்தபோது அக்கட்சியை எந்த குறையும் சொல்லாமல் வெளியே வந்தேன். சனிக்கிழமை புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்தேன். இந்த தகவலையடுத்து பாமக தொண்டர்கள் தவறான பதிவுகளையும், ஆபாசமான வீடியோக்களை தயார் பண்ணுவதாக முகநூலில் பதிவிடுகிறார்கள். இதனை கண்டித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்துள்ளேன். 

 

பாமகவில் உள்ளவர்களுக்கு நான் அரசியல் கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லையா என்று தெரியவில்லை. பாமகவில் நான் இருந்தவரை அக்கட்சியின் தலைமையை நான் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில் பாமக தொண்டர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அவர்கள் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். நான் தவறான விஷயத்தையோ, தவறான வார்த்தைகளையோ சொல்லியிருந்தால் அவர்கள் கோபப்படலாம். இதுவரை நான் பாமகவை பற்றி குறைசொல்லவே இல்லை. 
 

முதலில் கொலை மிரட்டல் வந்தது. பின்னர் மார்பிங் செய்து வீடியோ வெளியிடுவோம் என்று சொன்னதற்கு பிறகு புகார் கொடுக்காமல் எப்படி இருக்க முடியும்? அதுமட்டுமில்லாமல் மற்ற பெண்கள் பொதுதளத்திற்கு வர பயப்பட ஆரம்பிப்பார்கள். பாமக தலைமை ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கவில்லை?. ஒரு  பெண்ணை எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என்று அவர்கள் விட்டுவிடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படி நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்? அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்கட்டும், யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு அரசியல் கட்சி? அரசியல் கட்சிகளையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் வேரோடு அறுப்பதுதான் என்னுடைய வேலை. 
 

இதை கண்டுக்காமல் விட்டால், ஏன் நடந்தபோது அப்பவே சொல்லலனு நமக்கே ஒரு கேள்வி வரும். நேற்று பதிவு போட்டிருந்தவர், " மாணவர் சங்க செயலாளர்"ன்னு பெயர் போட்டிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியே வந்துகூட இதுவரைக்கும் பாமக பற்றி எதுவுமே வெறுப்பாக பேசியதே இல்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசுவதையும், பதிவு போடுவதையும், ஏன் பாமக வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது? ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?
 

பாமகவில் நான் இருந்தவரை எனக்கு உரிய மரியாதை கிடைத்தது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நான் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதனால் என்னை பற்றி இப்படி பதிவு போடுகிறார்களா என்பது தெரியவில்லை. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கேட்டு கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய்யுள்ளோம். அப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற பதிவுகளை போடுகிறார்கள் என்றால் இந்த மாதிரியான ஆண்களே இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்