ஆராய்ச்சி மாணவி சோபியா விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை சென்னை பாஜக அலுவலகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.
பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒரு தொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்த பயமும் இல்லை. இவ்வாறு கூறினார்.