Skip to main content

'ஒவ்வொரு வரிக்கும் விரைவில் விளக்கம்'-அண்ணாமலை ட்வீட்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

 Tamil Nadu Police's Question... Annamalai's Answer...

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட  நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.  

 

இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து வந்த நிலையில், தமிழக காவல்துறையையும் அவர் விமர்சித்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு பதில் தரும் விதமாக தமிழ்நாடு காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது,  அதில், 'பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறையின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அங்கு வெடித்துச் சிதறிய சிலிண்டர் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ விற்கு அனுப்பியதாகவும் கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும், விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல்துறை தான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம்.

 

விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசியப் புலனாய்வு முகமை சட்டம் 2008ல்  குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசியப் புலனாய்வு முகமை சட்டப்பிரிவு 6-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை பெற்றவுடன் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையை பெற்றவுடன் ஒன்றிய அரசு 15 தினங்களுக்குள் வழக்கின் தன்மைக்கேற்ப தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.

 

nn

 

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறைகள் எந்தத் தாமதமும் இன்றி முறையாகப் பின்பற்றப்பட்டு மாநில அரசு, ஒன்றிய அரசிற்கும் முறையாக அறிக்கை அனுப்பி அதன் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் கோவை கார் வெடிப்பு  நிகழ்விற்கு என்.ஐ.ஏ விசாரணையை பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது? தற்போது திடீரென வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. அவர் குறிப்பிடுவது புது டெல்லி உள்துறை அமைச்சகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே இதுபோன்ற உண்மை இல்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு கலங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.' என தமிழக காவல்துறை குறிப்பிட்டு இருந்தது.

 

இந்நிலையில் தமிழக காவல்துறையின் இந்த அறிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘போலீஸ் உயர் பதவிகள் அரசியலாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழக காவல்துறை அறிக்கையின் ஒவ்வொரு வரிக்கும் விரைவில் தக்க விளக்கம் அளிக்கப்படும்.' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்