பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் துவங்கப்படும். அதன்படி நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று துவங்க உள்ளது. காலை 11 மணியளவில் துவங்கும் கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை வாசிப்பார். அதில் மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அதை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கை மற்றும் திட்டங்களைப் பற்றி ஆளுநர் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் உரையுடன் இன்றைய பேரவை நிறைவடையும்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கூடும். அன்று ஈரோடு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவிற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள். அன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
11 ஆம் தேதி மீண்டும் கூடும் சட்டப்பேரவைத் தொடர் 12 ஆம் தேதியுடன் முடிவடையும். இதன் பின் சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதிக்கு, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கும் இடையே முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட உள்ளது.
தற்போதைய தமிழக அரசியல் சூழலில் நாளை நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.