2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அதில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று முன்தினம் (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அமைச்சராக பொன்முடி இன்று பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரை அமைச்சராக நியமிக்க பதவி பிரமாணம் எடுப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவிப்பார். அதன் பிறகு முறைப்படி பதவி பிரமாணம் எடுக்கப்படும்” எனத் தெரித்தார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று (16-03-24) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிதாக ஒருவர் அமைச்சராக பதவியேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் புதிதாக ஒரு அமைச்சராகப் பதவியேற்பது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.