டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா"அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, '' ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் நமது தமிழக அரசிற்கு 18.30 பைசா வருமானம் கிடைக்கிறது. எங்களுடைய ஒரே கேள்வி எல்லா மாநில அரசுகளுமே பெட்ரோல், டீசல் விலைகளில் தங்களுடைய வாட் வரியை குறைத்து விலையை கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு எதற்காக தமிழக அரசு மட்டும் குறைக்காமல் மத்திய அரசை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு தன்னுடைய வரியை குறைக்காமல் 2,720 கோடி ரூபாய் வருமானம் சம்பாதித்துள்ளார்கள். அதே நேரம் மத்திய அரசு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறது. எனவே முதல்வர் பேசுவதற்கும் முன்பு செய்துவிட்டு பேச வேண்டும். எனவே உடனடியாக வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக வலியுறுத்துகிறது. பாஜக இந்தி திணிப்பை விரும்பவில்லை. இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழக பாஜக அனுமதிக்காது'' என்றார்.