Skip to main content

“இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்களுக்கு ஆதரவு” - ஓபிஎஸ் தரப்பு பேட்டி

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

“Support to those who stand on double leaf symbol” OPS side interview

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

 

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.  இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாகத் தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் திங்கள் காலை  கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.

 

இந்நிலையில் அதிமுக பொது வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான படிவத்தையும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ளார். 

 

இந்நிலையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைத்திலிங்கம், “இபிஎஸ் வகிக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் சின்னம் வெற்றி பெற நானும் என் மீது பற்று கொண்ட அதிமுக தொண்டர்களும் பாடுபடுவோம் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்களை ஆதரிக்கிறோம்” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் தான். ஆனால்  அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான அவகாசம் இன்னும் இருக்கிறது. வேட்பாளர் படிவத்தில் தென்னரசு என குறிப்பிடப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அந்த படிவங்கள் இன்னும் வரவில்லை. நேரம் இல்லாததால் அறிக்கை வழியாக முடிவெடுக்க இருப்பதாக கேள்விப்பட்டோம். படிவங்கள் முதலில் வரட்டும். 

 

இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் போட்டியா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொதுக்குழு முடிவெடுத்து அனுப்பிய பின் தான் இது குறித்து கூற வேண்டும். அவைத்தலைவர்  சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தவறான தகவல். உச்சநீதிமன்றம் இது போன்ற தீர்ப்புகளில் ஆணையரை நியமிப்பார்கள். அப்படி இதில் தமிழ்மகன் உசேனை நியமித்துள்ளார்கள். பொதுக்குழுவின் தீர்மானத்தைத்  தான் அவர் அனுப்ப வேண்டும். 

 

பொதுக்குழு கூடவில்லை என்பதை முடிவு செய்ய முடியாது. இன்னும் நேரம் இருக்கிறது. வேறு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். 

 

எங்களை நீக்கியது செல்லாது என்று தான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. தீர்மானத்தில் கூட அதுதான் உள்ளது. அண்ணாமலை ஒருங்கிணைந்த அதிமுகவாக களமிறங்க வேண்டும். நாங்கள் வாபஸ் வாங்க வலியுறுத்த வேண்டும் என சொல்கிறார். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்