கோவை சூலூர் எம்.ல்.ஏ கனகராஜ் இறந்து போனதற்கு பிறகு இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதியாக உள்ளது. திமுகவின் வேட்பாளராக எக்ஸ் மினிஸ்டர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக வேட்பாளராய் அறிவிக்கப்பட்டிருக்கிறார் பொள்ளாச்சி எக்ஸ் எம்.பி சுகுமார். அதேபோல் தற்போது அதிமுக வேட்பாளராக வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சுகுமார்?
பொள்ளாச்சி கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுகுமார் பொள்ளாச்சி அதிமுக தெற்கு ஒன்றிய கவுன்சிலராகவும், ஒன்றிய சேர்மேனாகவும், மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் இருந்து கடந்த 2009-ல் அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளராய் களமிறங்கினார்.
அப்போது திமுக சார்பில் சண்முகசுந்தரம் களமிறங்கி மோதினார். அதில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 935 ஓட்டுகள் சுகுமாரும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 910 ஓட்டுகள் சண்முகசுந்தரமும் வாங்கினர். வெற்றிகளிப்போடு பொள்ளாச்சி வீதிகளில் ஒருமுறை வலம் வந்த சுகுமார், அதற்கு பின்னர் எங்கள் தொகுதி எம்.பியைக் காணவில்லை. அவரைக் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டி பொது மக்கள் தேடும் அளவுக்கு பெயர் வாங்கினார்.
அந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக கேள்வி கேட்க கையூட்டு வாங்கினார் சுகுமார். சுகுமார் பணம் வாங்குகிற வீடியோ வெளி வந்தபோது நம்ம எம்.பி பணம் வாங்கிட்டுத்தான் இருந்திருக்காரு. காணாம எல்லாம் ஒண்ணும் போகலை என கமெண்ட் அடித்தனர் பொள்ளாச்சி எம்.பி தொகுதி மக்கள்.
அதற்குப் பிறகு அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட சுகுமார், மனம் வெறுத்த நிலையில் அமமுகவில் இணைந்தார். தற்போது சூலூரின் வேட்பாளராய் நிற்கிறார். ஆரம்பமே குற்றக்களத்தோடு இறங்கும் சுகுமாருக்கு எதிராக கையூட்டு வாங்கியதாக சொல்லப்படும் விஷயத்தையே முக்கியப்படுத்தப்போகிறது திமுகவினரும், அதிமுக வினரும்.