சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. அத்துடன் ட்விட்டரில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து இணையவாசிகளும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூக வலைத்தள பதிவில், “தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா, தோழர் பூபேஷ் குப்தா என்று எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று திமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “நம் மொழி, பண்பாடு - அரசியல் - வாழ்வியலின் அடையாளம் ‘தமிழ்நாடு’. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.