Skip to main content

'4 வழிச்சாலை திட்டம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது' - பாமக ராமதாஸ் கருத்து

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

'4 way East Coast Road project cancellation shocking' - pmk Ramadas comment!

 

கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியை 4 வழிச்சாலை ஆக மாற்றும் திட்டம் கைவிடப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காததுதான் இதற்கு காரணம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா கடந்த 8ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிழக்குக் கடற்கரை சாலையின் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு தயாராக இல்லை. அதனால், 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதையும், அதற்காக அந்தச் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளை கைவிடுவதையும் தவிர தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு வேறு வழியில்லை’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

கிழக்குக் கடற்கரை சாலையை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம்தான் நிர்வகித்து வருகிறது. அந்தச் சாலையில் இந்த நிறுவனம்தான் சுங்கக்கட்டணமும் வசூலித்து வருகிறது. கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதால் ஏற்படும் இழப்பையும், அதற்காக வாங்கப்பட்ட கடனையும் ஈடுகட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.222.94 கோடி வழங்க வேண்டும் என்று  தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டதும், அதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புக்கொள்ளாததும்தான் சிக்கலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

'4 way East Coast Road project cancellation shocking' - pmk Ramadas comment!

 

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் நாள் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில், மாமல்லபுரத்திற்கு அப்பால் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில், கிழக்குக் கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

 

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கடிதம் கிடைத்த பிறகு தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கிழக்கு கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான தடையின்மை சான்றிதழை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு ரூ.223 கோடி இழப்பீடு பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம்,  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் நிலையில் பேசப்போவதாகவும் நிபந்தனை விதித்திருப்பதாக தெரிகிறது. இதை ஆணையம் ஏற்குமா என்பது தெரியவில்லை.

 

அதிமுக ஆட்சியில் இருந்த போது 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் நடத்திய பேச்சுகளின் போது எந்த இழப்பீடும் இல்லாமல் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் கோரும் ரூ.223 கோடியை தமிழக அரசே வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நிலைப்பாட்டை  இப்போதைய அரசும் மேற்கொண்டால் ஈ.சி.ஆர் 4 வழிச்சாலை அமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது.

 

சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விபத்துச் சாலை என்று அழைக்கப்படும் அளவுக்கு மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. இந்த சாலையில் பாம்பை விட மிக மோசமான வளைவுகள் உள்ளன. இவை அனைத்தையும் சரி செய்து, முதலில் 4 வழிச்சாலையாகவும், பின்னர் 6 வழி, 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்த வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

 

மிக முக்கியமான சாலையை 4 வழிச்சாலையாக உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால், மத்திய அரசிடமும்,  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமும் தமிழக அரசு செயலாளர் நிலையில் பேசி, 4 வழி கிழக்குக் கடற்கரைச் சாலை திட்டப்பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்