மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப் பேசியது சர்ச்சையானது.
இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மழை எச்சரிக்கையை முன்கூட்டியே கூறிவிட்டோம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப் பெறுங்கள். 4 மாவட்ட மழை பற்றி 12 ஆம் தேதியே வானிலை மையம் சொல்லிவிட்டது என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியென்றால் 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச் சங்க ரயிலின் தொடக்கவிழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி? கொட்டும் பேய் மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?
கடும் மழையால் பல ரயில்களை ரத்து செய்ய முடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலை மையத்தின் இவ்வளவு பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதற்கு யார் பொறுப்பு? ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் சிக்கிக்கொண்டு பயணிகள் 2 நாட்கள் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு? வானிலை மைய அறிக்கையை அறியாத பிரதமரா? என்னவானாலும் என்ன, தமிழ்நாட்டு மக்கள்தானே என்ற மனநிலையா? இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப் பெறுங்கள்” என்று கூறினார்.