அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டரில், “ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ... அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதைக் கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியான போது, “அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!” எனப் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.