![The story of the parrot told by Annamalai!](http://image.nakkheeran.in/cdn/farfuture/0dXZNVkuEBhiFJMpQ0nWfZTbhMbBgfBKqJk1dxAL_sw/1679653670/sites/default/files/inline-images/39_40.jpg)
கோவில்பட்டியில் தமிழ்நாடு பாஜக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக பயணிக்க புதிய பாதை தேவைப்படுகிறது. மோடியை வைத்தும் சாதனைகள் செய்ததை வைத்தும் வாக்குகள் கேட்க வேண்டும். 10 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள் என யாரும் நம்மைப் பார்த்து கேட்கமாட்டார்கள். எட்டரை கோடி தமிழ் மக்களுக்கும் செய்துள்ளோம். வீட்டிற்கு வீடு தண்ணீர் கொண்டு வந்துள்ளோம்.
வரும் பொழுது கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை போட்டு வந்தோம். காமராஜர் முதலமைச்சராக இருக்கும் பொழுது ஒரு முறை வீட்டிற்கு செல்கிறார். அப்போது அவரது வீட்டிற்குள் குடிதண்ணீர் குழாய் உள்ளது. அவரது அம்மாவை அழைத்து அது குறித்து கேட்கிறார். அதற்கு அவரது அம்மா வயதாகி விட்டதால் பஞ்சாயத்தில் சொல்லி இணைப்பு கொடுக்க சொன்னேன் என்கிறார். உடனே காமராஜர் இந்த பைப்பை எடுங்கள் என்கிறார். ஊரில் உள்ள எல்லோருக்கும் எப்பொழுது குடி தண்ணீர் பைப்பில் வருகிறதோ அப்பொழுது நம் வீட்டிற்கு வந்தால் போதும் என்கிறார். ஆனால் 70 ஆண்டுகளாக அந்த ஊரில் தண்ணீர் செல்லாமல் திமுக ஆட்சி செய்து கொண்டிருந்தது.
சில நேரங்களில் நம்மை கூண்டுக்குள் இருக்கும் கிளிகளை போல் பார்க்கக் கூடாது. கிளி 30 ஆண்டுகளாக கூண்டுக்குள்ளேயே இருக்கிறது. அதை ஒரு நாள் திறந்துவிட்டால் அது சொல்லும், ‘திடீரென்று கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்து போ என்றால் எனக்கு பறக்க தெரியாது’ என்கிறது. அந்த கிளி பறக்கும் என்றும் அந்த கூண்டு இப்பொழுது திறக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறேன். அந்த கிளி தயாராக இருக்கிறது என்பதை நம்புகிறேன். களம் மாறிவிட்டது என்பதை நாம் உணர்ந்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.