தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இதனைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் யான் பென்னி குயிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட ஐந்து மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுயிக் பெயரை வைப்பதோடு அவர்களுடைய தொழில் நிறுவனங்களுக்கு பென்னிகுயிக் பெயரை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம், லண்டனில் பென்னிகுயிக் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டது தொடர்பாக கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், ‘விவரங்களை அரசு அறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து சட்டசபையில் தெரிவிப்போம்’ எனக் கூறியுள்ளார்.
சிலை நிறுவுவதற்கு உரிய பணம் செலுத்தாத காரணத்தால் சிலை கருப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் சிலையை அங்கிருந்து அகற்றி விடுவோம் எனவும் அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 7 மாதங்களுக்கு முன் லண்டனில் பென்னி குயிக் சிலை திறக்கப்பட்டது. லண்டனில் தமிழக அரசால் நிர்மாணிக்கப்பட்ட பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் சிலை தற்போது நல்ல முறையில் உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் பென்னி குயிக் சிலை மீது மூடப்பட்ட கருப்புத் துணி அகற்றப்பட்டது.