பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். தொடர்ந்து 27 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். தருமபுரியில் போட்டியிடும் தனது மகன் அன்புமணி ராமதாஸ்க்காக கடந்த சில நாட்களாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் ராமதாஸ், அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறார். ராமதாஸ் காரில் உள்ள லைட் போடப்பட்டு, அந்த ஒளியில் தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது ராமதாஸ், அங்கு கூடியிருக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்கிறார். பின்னர் அக்குறைகளை களையவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் ஆதரவளிப்பதாக நம்பிக்கை கொடுக்கின்றனர்.
ராமதாஸ் பங்கேற்கும் திண்ணைப் பரப்புரைக் கூட்டங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன. அந்தக் கூட்டங்களில் அவர் அதிகம் பேசுவதில்லை. மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்; மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களின் கோரிக்கைகள் தான் பாமக கொள்கை என்று ராமதாஸ் கூறும் போது அங்குள்ள மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தருமபுரி தொகுதியில் வரகூர், இபிகொல்லஹள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை ராமதாஸ் நேற்று சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.